குமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு


குமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு
x
தினத்தந்தி 22 Aug 2018 4:15 AM IST (Updated: 22 Aug 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் வழங்கினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்த மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பெருஞ்சாணி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் பாசன கால்வாய்கள் வழியாகவும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருஞ்சாணி அணையின் உபரிநீர் கால்வாயில் உடைப்பெடுத்து ரப்பர் தோட்டங்களில் வெள்ளம் புகுந்ததோடு, கரையோர குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோல் மேற்கு மாவட்டத்தின் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தன. பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை குறைந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதுபற்றிய தகவல் அறிந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். மேலும் அவரது ஏற்பாட்டின்பேரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.

குறிப்பாக வைக்கல்லூர், காஞ்சாம்புறம், பள்ளிக்கல், மங்காடு, பார்த்திபபுரம் பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள பெட்ஷீட், வேட்டி- சேலை, லுங்கி, பிஸ்கட் பாக்கெட், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி சசிராஜ் தலைமையிலான அதிகாரிகள் வழங்கினர்.

பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர். 

Next Story