மழை, வெள்ளத்தால் பாதித்த வயநாடு மாவட்டத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பு
மழை, வெள்ளத்தால் பாதித்த வயநாடு மாவட்டத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஊட்டி,
கேரளாவில் பெய்த பலத்த மழையால் வயநாடு, இடுக்கி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை, வெள்ளத்தால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த பேரிடரிலிருந்து கேரள மக்களை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆண்களுக்கான துணிகள், பெண்களுக்கான துணிகள், செருப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பில் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் வயநாட்டிற்கு அனுப்பப்பட்டது. அதேபோல் குன்னூர் பெரிய வண்டிச்சோலை கிராம மக்கள் சார்பில், ரூ.60 ஆயிரம் மதிப்பில் சர்க்கரை, அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
கோத்தகிரி வியாபாரிகள் சங்கம், மர வியாபாரிகள், தனியார் பள்ளிகள், தேயிலை தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து அரிசி, மளிகைபொருட்கள், ஆடைகள், பால்பவுடர், தண்ணீர் பாட்டில்உள்பட அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள முத்தையா அரங்கத்தில் வைக்கப்பட்டன. நேற்று காலை நிவாரண பொருட்கள் அனைத்தும் 2 லாரிகளில் ஏற்றப்பட்டு கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் வயநாடு மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக ஒப்படைக்கப்பட உள்ளது.
மசினகுடியில் உள்ள நீலகிரி மோட்டார் வாகன டிரைவர்கள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 2 டன் அரிசி, 200 கிலோ பருப்பு, 200 கிலோ சர்க்கரை, காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள், சேலைகள், வேட்டிகள், உப்பு, மிளகாய், போர்வை, கம்பளி, குடங்கள், பாய்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட மானந்தவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க 2 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.