தனியார் நிதி நிறுவனம் ரூ.2 கோடி மோசடி: ஊட்டியில் ரகசியமாக தகவல்களை சேகரிக்கும் போலீசார்
தனியார் நிதி நிறுவனம் ரூ.2 கோடி மோசடி செய்தது குறித்து, ஊட்டியில் போலீசார் ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
ஊட்டி,
சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கடை வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள், டாக்டர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து வட்டியுடன் சேர்த்து தருவதாக அறிவித்தது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்க ஏஜெண்டுகளையும் நியமித்தது.
இந்த ஏஜெண்டுகளுக்கு சம்பளம் வழங்காமல், அவர்கள் வசூலிக்கும் தொகைக்கு ஏற்ப கமிஷன் வழங்குவதாகவும் அறிவித்தது. அதனை தொடர்ந்து ஏஜெண்டுகள் 20 பேருக்கு மேல் நியமனம் செய்யப்பட்டு கடை வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் பணத்தை வசூலித்தனர். ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மட்டும் சிலருக்கு அவர்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வு தொகை நிதி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
இதனை நம்பி மேலும் பலர் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து தங்களது தொகையை செலுத்தி வந்தார்கள். நாளடைவில் இந்த நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய முதிர்வு தொகைக்கான காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடந்த 2016–ம் ஆண்டு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நிறுவனம் ரூ.2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவனத்திடம் பணம் செலுத்தி திரும்ப பெற முடியாமல் உள்ள வியாபாரிகள், ஏஜெண்டுகளிடம் ஊட்டி போலீசார் ரகசியமாக தகவல்கள் மற்றும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.