தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில பெண் தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுக்கப்படும்


தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில பெண் தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுக்கப்படும்
x
தினத்தந்தி 21 Aug 2018 10:30 PM GMT (Updated: 21 Aug 2018 8:17 PM GMT)

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில பெண் தொழிலாளர்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.

திருப்பூர்,

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருத்துரையாளர்கள் வந்து சிறப்பித்து பேசினார்கள்.

முன்னதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருகிறார்கள். இவர்களில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது 40 சதவீத வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த தொழிலாளர்கள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த தொழிலாளர்கள் அனைவரும் முறையாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால் குறைவான எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில பெண் தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும். இது திருப்பூர் மாவட்டத்தில் முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை, குறைந்த கூலி பெறுவது மற்றும் மொழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரிமைகளும், பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதுகுறித்த புகார்களை அந்தந்த நிறுவனங்களில் உள்ள புகார் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் 10 பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் கூட கட்டாயம் புகார் கமிட்டி அமைக்கப்பட்டு முழுமையாக பராமரிக்க வேண்டும். இந்த கமிட்டியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அந்த கமிட்டி விசாரணை செய்ய முடியாதபட்சத்தில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களின் கீழ் செயல்படும் மாவட்ட குழுவிடம் குறைகளை தெரிவிக்கலாம். தொழில் நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story