கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2018 3:45 AM IST (Updated: 22 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தாலோ, தரமற்ற உரங்களை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவ மழையை பெருமளவில் நம்பி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் நெல், 7 ஆயிரத்து 400 எக்டர் சிறுதானியங்கள், 3 ஆயிரத்து 800 எக்டேர் பயறு வகைகள் மற்றும் 6 ஆயிரத்து 540 எக்டர் எண்ணை வித்துக்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கேற்ப ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு ராபி பருவத்திற்கு தேவையான ரசாயான உரம் 40 ஆயிரத்து 440 டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களிலும் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவற்றில் யூரியா 1,945 டன், டி.ஏ.பி. 688 டன், பொட்டாஷ் 140 டன், கலப்பு உரங்கள் 947 டன் என ஆக மொத்தம 3,720 டன் உரங்கள் தற்போதைய நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்கு தேவையான உர வினியோக திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட உர உற்பத்தி நிறுவனங்களான இப்கோ கூட்டுறவு நிறுவனம், ஸ்பிக் நிறுவனம், மதராஸ் உர நிறுவனம், பாக்ட் நிறுவனம், இந்தியன் பொட்டாஷ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை முனைப்பு எந்திரம் மூலமாக மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

யூரியா தவிர பொட்டாஷ், பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்கள் அந்தந்த உர உற்பத்தி நிறுவனங்களினால் உர மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா தற்போது 45 கிலோ மூடைகளில் கிடைக்கிறது. ஒரு மூடையின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.266.50 ஆகும்.

உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியியல் விவரத்தினை பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்றாலோ அல்லது தரமற்ற உரங்களை விற்றாலோ விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுபாடு சட்டம் 1985ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story