தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 8:36 PM GMT)

மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்,

புதுச்சேரி பிரதேச மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதுச்சேரியில் மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மணல் குவாரி ஏற்படுத்த வேண்டும், மாட்டி வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதி (பெர்மிட்) வழங்க வேண்டும், தமிழக அரசுடன் பேசி புதுச்சேரியில் தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பாகூர், சேலியமேடு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்றுக் காலை மாட்டு வண்டிகளுடன் பாகூரில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் மாட்டு வண்டிகளுடன் பாகூரில் உள்ள 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பாகூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவானந்தம், துணை தலைவர்கள் கலியன், குணசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் திருமுருகன் உள்பட மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்ததால் பாகூரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story