ரூ.37 லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது


ரூ.37 லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2018 10:43 PM GMT (Updated: 21 Aug 2018 10:43 PM GMT)

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிதம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு அரசால் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் சரக்கு வேன்களில் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு வேன்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் 3 வேன்களில் 7½ டன் அளவு கொண்ட 200 மூட்டை புகையிலைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். இதையடுத்து 3 சரக்கு வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதை ஓட்டி வந்த டிரைவர்களை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த புகையிலைப்பொருட்கள் சிதம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பெங்களுரூவில் இருந்து தமிழகத்துக்கு புகையிலைப்பொருட்களை கடத்தியதாக வேன் டிரைவர்களான திருவண்ணாமலை மாவட்டம் மேகலூரைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 30), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருண்குமார்(25), கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டேகுப்பத்தை சேர்ந்த மணி(30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story