மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 22 Aug 2018 5:11 AM IST (Updated: 22 Aug 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தேவாரம்,


தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள செல்லாயிபுரத்தை சேர்ந்தவர் ராமசெல்வம். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி வனராணி. இவர்களது மகள் சாருமதி (வயது 12). இவள், அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். சாருமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது, அவள் வீட்டில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தாள். இதில் எதிர்பாராத விதமாக, துப்பட்டா கழுத்தில் இறுகி சாருமதி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய ராமசெல்வம், வனராணி ஆகியோர் தனது மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அங்குள்ள மயானத்தில் சாருமதியின் உடலை அவர்கள் புதைத்து விட்டனர்.

இந்தநிலையில் சாருமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவாரம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலையில், சாருமதியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த உடலை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.இதில் கழுத்து இறுகி சாருமதி இறந்தது தெரியவந்தது. பின்னர் சாருமதியின் உடல், அதே இடத்தில் புதைக்கப்பட்டது. மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story