தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
x
தினத்தந்தி 22 Aug 2018 6:04 AM GMT (Updated: 22 Aug 2018 6:04 AM GMT)

இன்றைய பரபரப்பான உலகில் நிம்மதியான தூக்கம் என்பது பலருக்கும் பிரச்சினையாகத்தான் உள்ளது.

ஒரு காலத்தில் பணக்காரர்களுக்குத்தான் தூக்கம் வராது என்பார்கள். இன்று நடுத்தர வயதுப் பிரிவினரும், தொழில்நுட்பத் துறையினரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர்.

தூக்கம் வருவதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் ஒரு போதும் பரிந்துரைப்பதில்லை. மேலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இவர்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காகத்தான் பிலிப்ஸ் நிறுவனம் தூக்கம் வரவழைக்கும் ‘ஹெட் பேண்ட்’ ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘ஸ்மார்ட் ஸ்லீப்’ என பிலிப்ஸ் நிறுவனம் இதற்குப் பெயரிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹெட் பேண்ட், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. தூக்கம் வருவதற்கான நரம்புகளைத் தூண்டி கண்களை சொக்க வைக்கும் வேலையை இது செய்யும்.

உங்கள் மூளை நரம்புகளில் தூக்க சுழற்சியை அறிந்து அதன்படி செயல்பட வைக்கும். மேலும், மூளையின் செயல்பாட்டை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் உங்களை தூக்கத்துக்கு இட்டுச் செல்லும்.

இதில் இரண்டு வகையான ‘சென்சார்’கள் உள்ளன. இது நீங்கள் எந்த சமயத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறீர்கள் என்பதை அறிந்து அதன்படி மூளைகளின் செயல்களை படிப்படியாகக் குறைக்கும். இந்த கருவி எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்று ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ சோதனையின்போது இதை அணிந்த பலரும் நீண்ட நேரம் தூங்கியதன் மூலம் பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற முடிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தூக்கம் வராமல் தவிக்கும் பலருக்கும் இத்தகைய ஹெட் பேண்ட் சிறந்த நிவாரணியாக இருக்கும்.

Next Story