கேரளாவுக்கு ரூ.17¾ லட்சம் நிவாரண பொருட்கள் கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்


கேரளாவுக்கு ரூ.17¾ லட்சம் நிவாரண பொருட்கள் கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 22 Aug 2018 9:14 AM GMT (Updated: 22 Aug 2018 9:14 AM GMT)

ரூ.17¾லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் இருந்து பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைத்த ரூ.17¾லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.

நிவாரண உதவிகள்

கேரளாவில் மழைவெள்ளத்தால் பெரும்பாலான மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மக்களுக்கு தமிழகத்தில் இருந்து தொடர்ந்து ஏராளமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் ஏராளமான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். நெல்லை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் குடிநீர், வேஷ்டி, துண்டு,போர்வை, பற்பசை, மருந்துகள், சோப்பு, எண்ணெய், நாப்கின், அரிசி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் ரூ.5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. மாவட்ட ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான சேலை, நைட்டி, சட்டை, லுங்கி, வேஷ்டி, துண்டு, உள்ளாடைகள் போன்ற 3 ஆயிரம் துணி வகைகள் ஒப்பைடக்கப்பட்டன. அம்பை மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ.4.78 லட்சம் மதிப்பிலான துணிகள், பத்தமடை முத்தமிழ் பப்ளிக் பள்ளி யூகேஜி மாணவி லட்சண்யராஜ் விடுமுறை நாட்களில் நிவாரண நிதியாக வசூலித்த ரூ.6 ஆயிரத்து 538 மற்றும் பொருட்கள், சங்கர்நகர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் சேகரித்த சோப்பு, பவுடர், பிரஸ், எண்ணெய், மெழுகுவர்த்தி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கேரளாவுக்கு...

இந்த வகையில் கிடைத்த ரூ.17.85 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை நேற்று கலெக்டர் ஷில்பா கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த், எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சோனாவெங்கடாச்சலம், சேதுராமன், சங்கரநாராயணன், ஆர்.எம்.கே.வி. ராஜேந்திரகுமார், மதுரா கோட்ஸ் நிறுவன பொதுமேலாளர் ராம்குமார், தொழிலியல் உறவு மேலாளர் முருகேசன், என்ஜினீயர் பாலகிருஷ்ணன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story