திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. தூத்துக்குடி ஈத்கா திடலில் நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமை தாங்கி, தொழுகையை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி முஜிபுர் ரகுமான், உதவி இமாம் முகமது ரிபாய், ஒருங்கிணைந்த ஐக்கிய ஜமாத் தலைவர் மீராசா உள்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடியில் ஜாகிர் உசேன் நகர், ரஹ்மத்நகர், முத்தையாபுரம், திரேஸ்புரம், ஜெய்லானிதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினம்
காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் நேற்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி, பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். ஏழைகளின் நலனுக்காக காணிக்கை வசூலிக்கப்பட்டது. ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள்
இதேபோன்று காயல்பட்டினத்தில் உள்ள புது பள்ளி, ஹாஜி அப்பா தைக்கா பள்ளி, அருசியா பள்ளி, காட்டு தைக்கா பள்ளி, முகைதீன் பள்ளி, அப்பா பள்ளி, ஆறாம் பள்ளி, கடை பள்ளி, சிறுநைனா காதிரியார் பள்ளி, சம்சுதீன் ஜூம்ஆ பள்ளி, மொகதூம் பள்ளி உள்ளிட்ட 26 பள்ளிவாசல்களிலும், 41 பெண்கள் தைக்காக்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனால் காயல்பட்டினம் நகரம் விழாக்கோலம் பூண்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
கோவில்பட்டி
கோவில்பட்டி செக்கடி தெரு டவுன் ஜாமிஆ பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் முகமது அலி சிறப்பு தொழுகையை நடத்தினார். பள்ளிவாசல் தலைவர் முகமது நயினார், துணை தலைவர் ஜிந்தா மதார், செயலாளர் அமானுல்லா கான், பொருளாளர் பீர் முகமது உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோன்று கோவில்பட்டி முகமதுசாலிஹாபுரம், புதுகிராமம், ராஜீவ்நகர் பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை நடந்தது.
உடன்குடி
உடன்குடி எம்.ஜி.ஆர். நகரில் ஜமாத் சார்பில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. தமீம் அன்சாரி சிறப்பு தொழுகையை நடத்தினார். உடன்குடி தாயிப் நகரில் தக்வா மஸ்ஜித் இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில், சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் முகமது முகைதீன் சிறப்பு தொழுகையை நடத்தினார்.
இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Related Tags :
Next Story