குமரி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்


குமரி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:00 AM IST (Updated: 22 Aug 2018 8:31 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

நாகர்கோவில்,

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் நேற்று அதிகாலையிலேயே பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்– சிறுமிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் இளங்கடை பாவாகாசிம் ஒலியுல்லா மைதானத்தில் நேற்று காலையில் ஏராளமான முஸ்லிம் ஆண்களும், பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் இடலாக்குடி முகையதீன் பள்ளிவாசல், இடலாக்குடி பொன்அரிப்புத்தெரு பள்ளிவாசல், வடசேரி, மணிமேடை சந்திப்பு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட நகரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடந்தது.


இந்த தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். சிறுவர்– சிறுமிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல் தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், தேங்காப்பட்டணம், குலசேகரம், மார்த்தாண்டம், திட்டுவிளை, புதுக்கடை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஆடு, மாடுகளை பலியிட்டு அவற்றின் இறைச்சியை உறவினர்களுக்கும், ஏழை– எளியவர்களுக்கும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.


பூதப்பாண்டி திட்டுவிளையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஜமாஅத் தலைவர் மைதீன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Next Story