காரங்காடு உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை


காரங்காடு உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

காரங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு சீராக காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா, ஏ.மணக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, புதுக்காடு ஆகிய கிராமங்களுக்கு ஏ.மணக்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இத்திட்டம் கடந்த ஓராண்டுக்கு முன்பு முடங்கிப்போய் விட்டது. இதனால் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சோளியக்குடி கிராமத்தில் இருந்து தனி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முள்ளிமுனை கிராமத்திற்கு காவிரி குடிநீர் குறைவான அளவில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முள்ளிமுனை அருகே உள்ள காரங்காடு கிராமத்திற்கு காவிரி குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் குடிநீர் வசதியின்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல ஏ.மணக்குடி, புதுக்காடு ஆகிய கிராமங்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் இல்லை. இதன் காரணமாக இந்த கிராமங்களிலும் குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சோளியக்குடி கிராமத்தில் இருந்து முள்ளிமுனை கிராமத்திற்கு செல்லும் காவிரி குடிநீரையும், கள்ளிக்குடி கிராமத்தில் இருந்து ஏ.மணக்குடி வரும் காவிரி குடிநீரையும், ஏ.மணக்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி இந்த தரைமட்ட தொட்டியில் இருந்து நீரேற்றம் செய்ய வேண்டும். இந்த கிராமங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே பைப்லைன் வசதி உள்ளதால் இதன் மூலம் முழுமையான குடிநீர் வசதியை பெற முடியும்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் இந்த கிராமங்கள் பயன்பெரும் வகையில் குடிநீர் வினியோகம் செய்தால் ஏ.மணக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, புதுக்காடு ஆகிய கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதன் மூலம் சுமார் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story