சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பரிதவிப்பு
சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் உள் மற்றும் வெளி நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி,
மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமாக சிங்கம்புணரி உள்ளது. தொழில் நகரம் என்றும் அழைக்கப்படும் சிங்கம்புணரியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை, அரிசி ஆலை, இரும்பு பட்டறைகள் என பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. நகரில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சிங்கம்புணரி தனி தாலுகா அந்தஸ்து அளிக்கப்பட்டது. சிங்கம்புணரியில் கடந்த 1970–ம் ஆண்டு அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் வசதிக்காக கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் தற்போது 100–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 500 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு சராசரியாக ஒரு மாதத்திதில் 50 பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. இதேபோல் மாதத்தில் 30 முதல் 40 அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாகவே டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. பிரசவம் பார்க்க பெண் டாக்டர் இல்லாமல் கர்ப்பிணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் மற்ற சிகிச்சைகளுக்கும் ஓரிரு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் பகுதியிலும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள், ஊழியர்கள் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி அண்ணாநகரை சேர்ந்த பேகம் என்பவர் கூறுகையில், இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக பெண் டாக்டர்கள் இல்லாததால், கர்ப்பிணிகள் கர்ப்ப காலங்களில் பரிசோதனைக்காக வரும் போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இங்கு பெண்களுக்காக தனியாக பெண் டாக்டர் இல்லாததால் ஆண் டாக்டர்களிடம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து கூற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பெண் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றார்.