5 கிராமங்களில் சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


5 கிராமங்களில் சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நடக்க இருந்த குழந்தை திருமணங்களை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தி சிறுமிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் அரசு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வந்தாலும் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அதிகரித்து வரும் நிலை உள்ளது. இம்மாதிரியான குழந்தை திருமணங்கள் பற்றி தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதிகாரிகள் அங்கு சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும் இதுபற்றி தகவல் ஏதும் இல்லாத நிலையில் குழந்தை திருமணங்கள் நடக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு விருதுநகர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதே போன்று கணைஞ்சாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கும், திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கம்பாளி கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 36) என்பவருக்கும் நடக்க இருந்த திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

காரியாபட்டி அருகே 14 வயது சிறுமிக்கும், உறவினருக்கும் நடக்க இருந்த திருமணமும், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணமும் அதிகாரிகளால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டதோடு, திருமணம் நடக்க இருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கிராமப்புறங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது பகுதியில் குழந்தை திருமணங்கள் நடக்க இருந்தால் அதிகாரிகள் உதவியோடு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறையின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

மேலும் குழந்தை திருமணங்களை முற்றிலும் தவிர்க்க சேவை மற்றும் தொண்டு நிறுவனங்களையும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மொத்தத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை தேவைப்படும் நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story