அரக்கோணத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு
அரக்கோணத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாக கலெக்டர் ராமன் கூறினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.95 கோடியே 51 லட்சம் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சோமசுந்தரம் நகரில் நடந்து வரும் துணை உந்து நிலையத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பழனிப்பேட்டை பகுதியில் சாலையின் குறுக்கே இடிக்கப்பட உள்ள சிறுபாலத்தையும், சில்வர்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரக்கோணத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் இணைப்பை பாதாள சாக்கடை குழாயுடன் இணைப்பதற்கு பொதுமக்களிடம் டெபாசிட் வாங்க காத்திருக்க வேண்டாம். வீடுகளில் இருந்து கழீவுநீர் இணைப்பை பாதாள சாக்கடை குழாயுடன் நகராட்சி நிர்வாகம் இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் குழாய் இணைத்த பின்னர் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் தொகையை வசூல் செய்து கொள்ள வேண்டும்.
வீடுகளின் கழிவுநீர் குழாய் இணைக்க பணியை நிறுத்தி வைக்கக்கூடாது. மேலும் அரக்கோணத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்து உள்ளது. சிறிய அளவிலான வேலைகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டு உள்ளேன். அக்டோபர் மாதம் தொடக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் மணி, தாசில்தார் பாபு, நகராட்சி பொறியாளர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் மோகன், நகராட்சி அலுவலர் நாகராஜ் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story