வெள்ள அபாய எச்சரிக்கை விடப் படவில்லை: காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்படாது


வெள்ள அபாய எச்சரிக்கை விடப் படவில்லை: காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்படாது
x
தினத்தந்தி 22 Aug 2018 11:00 PM GMT (Updated: 22 Aug 2018 8:44 PM GMT)

கொள்ளிடம் அணை இடிந்ததால் காவிரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்படாது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படவில்லை என்று கலெக்டர் கே.ராஜாமணி கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணையின் 8 ஷட்டர்கள் (மதகு)சேதம் அடைந்து இடிந்து விழுந்து உள்ளது. இந்த அணை கடந்த 1836-ம்ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 4 நாட்களுக்கு முன் முக்கொம்புக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 37 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது இந்த அணையில் உள்ள 45 மதகுகளின் மூலம் தான் வினாடிக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இன்று (நேற்று) மாலை 6 மணி நிலவரப்படி கொள்ளிடத்தில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்று ெ-ாண்டிருந்தது. இந்த நிலையில் தான் 8 மதகுகள் இடிந்து விழுந்து உள்ளது. அணைக்கட்டு இடிந்ததால் காவிரியில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்படாது. தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அருகில் உள்ள காவிரி அணைக் கும் எந்த வித பாதிப்பும் இல்லை.

அணைக்கட்டு இடிந்த பகுதியில் யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது இரவு நேரம் என்பதால் அணையில் உள்ள மற்ற மதகுகளின் ஸ்திரத்தன்மை பற்றி ஆராய முடியவில்லை. காலையில் தான் இதுபற்றி தெரிவிக்க முடியும். அணை இடிந்ததற்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியது தான் காரணம் என கூற முடியாது. இந்த அணை 182 ஆண்டுகள் உழைத்து உள்ளது. தற்போது வலுவிழந்ததால் உடைந்து உள்ளது.அணைகட்டின் மற்ற மதகுகளை இடித்து விடுவதா? அல்லது பழுதுபார்க்க முடியுமா? என்பது பற்றி காலையில் தான் தொழில் நுட்ப வல்லுனர்களின் ஆய்வுக்கு பின்னர் கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story