கை, கால்கள் செயலிழந்த சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை: மதுரை பெரிய ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
கை, கால்கள் செயலிழந்த சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மனைவி அனுசுயா. இவர்களது மகன் ஜெகநாதன்(வயது 9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறான்.
திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் கடந்த மே மாதம் 28–ந்தேதி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்து பார்த்ததில் ‘குல்லியன் பார்ரோ‘ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்டால் உடலில் உள்ள தசைகளில் பலவீனம் ஏற்படும். அதன்பின்னர் அது படிப்படியாக தொடர்ந்து உடல் முழுவதிலும் பரவி கைகள், கால்களை செயல் இழக்க செய்வதுடன், உணவு விழுங்குவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையின் மூலம் தற்போது அந்த சிறுவன் அந்நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து நலமுடன் இருக்கிறான். அவனுடைய கை, கால்களும் செயல்பட தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து பெரிய ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் கூறுகையில், குல்லியன் பார்ரோ எனப்படும் நோய் ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமியால் ஒவ்வாமை ஏற்பட்டு, அது நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் கை, கால்கள் நடக்க முடியாத வகையில் செயல்இழந்து விடும். இந்த நிலைமையில் தான் ஜெகநாதன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தீவிர சுவாச சிகிச்சை பிரிவின் கீழ் மயக்கவியல் குழு இயக்குனர் கல்யாண சுந்தரம், டாக்டர்கள் செல்வகுமார், பாப்பையா, சேகர், ஜடாமுனி, கணேஷ்பாண்டியன், குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள் ராஜராஜேஸ்வரன், ரம்யா, பிசியோதெரபிஸ்ட் சரவணபெருமாள் மற்றும் செவிலியர் குழுவினர் கடந்த 81 நாட்களாக சிகிச்சை அளித்துள்ளனர். அதில் 59 நாட்கள் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகள் மட்டுமின்றி சிறுவனுக்கு பல்வேறு உடற்பயிற்சிகளும் அளிக்க வேண்டியது இருந்தது. அதனையும் செவிலியர் குழுவினர், பிசியோதெரபிஸ்ட் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.
தனியார் ஆஸ்பத்திரியில் இதுபோன்ற சிகிச்சைகள் பெற சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் செலவாகும். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் இது முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதனை பெரிய ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் சிறப்பாக செய்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருவுறாத பெண்ணுக்கு சிகிச்சை அளித்த விவகாரம் குறித்து டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, “யாஸ்மின் என்பவர் அரசு மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். அவருக்கு சிறுநீரக பரிசோதனை செய்யப்பட இருந்தது. மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்க எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதற்குள் அங்கிருந்து சென்று விட்டார். இதன் காரணமாக அவருக்கு எந்தவித ஸ்கேனும் எடுக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். விசாரணை நடத்த, குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.