தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும்


தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மு.க. ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்திய அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவரும், பொது வாழ்வில் 80 ஆண்டுகாலம் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராக 50 ஆண்டு காலம் பணியாற்றியவரும், கவிஞர், எழுத்தாளர், அரசியல் போன்ற பன்முக தன்மையுடன் விளங்கியவருமான கருணாநிதி மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

கருணாநிதியின் புதல்வரும், கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல் இன்று வரை அயராது உழைத்து வருகிறார். அவர் 1968-ம் ஆண்டு முதல் வட்ட பிரதிநிதி, பகுதி பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வந்து பின்னர் 1974-ம் ஆண்டு முதன்முதலாக பொதுக்குழு உறுப்பினரானார். அதன் பிறகு 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டு ஏறத்தாழ 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி இளைஞர் அணியை தி.மு.க.வில் உள்ள அணிகளில் முதலாவது அணியாக உயர்த்தினார்.

2003-ம் ஆண்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தி.மு.க. பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரை கழக பொருளாளராகவும், 2017-ம் ஆண்டு முதல் கட்சியின் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை கட்டுக்கோப்பாகவும், எழுச்சியுடனும், மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடனும் நடத்தி வருகிறார். ஆகவே இன்றைய நிலையில் அவர் தலைவராக தேர்வு செய்யப்படுவது தான் கழகத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். துடிப்புடனும், எழுச்சியுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் கட்சியினரிடம் மாறாத அன்புகொண்டு பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story