புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ்
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி வெகுவேகமாக நகரமயமாக மாறி வருகிறது. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நகர பகுதியில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் இந்தியாவில் புதுச்சேரி 5–வது இடத்திலும், தென்னிந்திய அளவில் முதல் இடத்திலும் உள்ளது. ஆனால் இங்கு வாழும் மக்களின் நிலை தரமுள்ளதாக, மேம்பட்டதாக, வளர்ச்சியுற்றதாக உள்ளதா என்றால் இல்லை என்று சமீபத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் கணக்கெடுப்பு நடத்தி அறிவித்துள்ளது.
111 நகரங்களின் தரவரிசை பட்டியலில் புதுவை 60–வது இடத்தில் உள்ளது. இது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பூனே நகரம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மதிப்பீட்டின் படி புதுச்சேரி வாழ்வதற்கு மிக வசதியான நகரம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனை புதுவை முதல்–அமைச்சரும், கவர்னரும், அதிகாரிகளும் யோசித்து பார்க்க வேண்டும்.
நகர ஆளுமையில் புதுச்சேரி 86–வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் புதுவையில் நகராட்சி இல்லை. 1968 முதல் 2018 வரை புதுவை நகராட்சி முடக்கப்பட்டு மக்களுக்கான வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை. புதுச்சேரி அரசும் புதுவை நகரத்திற்கான குறிப்பிட்ட திட்டங்களை சரியாக வகுத்து செயல்படுத்தி அதன் பயன்களை மக்களிடையே கொண்டு செல்ல முடியவில்லை. மக்களுக்கு வீட்டின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, கழிவுநீர், நிர்வாகம் போன்றவை மக்கள் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உயரவில்லை.
எனவே புதுவை அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி நகர நிர்வாகத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். புதுவை நகரத்திற்கு என்று பிரத்தியேக திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அதற்கான தொகை அந்த திட்டத்திற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.