மாயமான கட்டிட தொழிலாளி முந்திரி தோப்பில் பிணமாக மீட்பு
பண்ருட்டி அருகே மாயமான கட்டிட தொழிலாளி, முந்திரி தோப்பில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அனிதா(22). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி பண்ருட்டி சென்று வருவதாக தனது குடும்பத்தினரிடம் ராமன் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பணிக்கன்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
மேலும் அங்கு பிணமாக கிடந்தவர், மாயமான ராமனாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசாரும் மற்றும் ராமனின் குடும்பத்தினரும் முந்திரிதோப்புக்கு சென்றனர். அங்கு கிடந்த உடலை பார்த்து, அவர் ராமன் தான் என்று அவருடைய குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். பிணமாக கிடந்த அவரது உடலை பார்த்து, குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதற்கிடையே ராமன் இறந்து 9 நாட்கள் ஆனதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதன்காரணமாக, டாக்டர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கேயே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
ராமனை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து முந்திரி தோப்பில் போட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காடாம்புலியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமனை வீட்டில் இருந்து அழைத்து சென்ற விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூரை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story