வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்று நேரடி நெல்விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து பாசனத்துக்காக கடந்த மாதம் 19-ந்தேதி அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்ததால், அதற்கேற்ப காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வர தொடங்கியது. இதனால் வறண்டு கிடந்த ஏரி, வேகமாக நிரம்ப தொடங்கியது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரி நிரம்பியதை அடுத்து, ஏரிக்கு வந்த நீர் உபரி நீராக சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வெறியேற்றப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. ஏரி நிரம்பியதை அடுத்து, இதை சார்ந்துள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தங்களை முழுவீச்சில் தயார் செய்து வருகின்றனர். ஆனால் டெல்டா பகுதியில் பாசனத்திற்காக ஏரியில் இருந்து இதுவரையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இருப்பினும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி நாற்று நடும் பணிகளிலும் ஈடுபட தங்களை தயார் செய்து வருகிறார்கள்.
வீராணம் ஏரியில் 34 பாசன வாய்க்கால்கள் உள்ளது. இதில் ரூ.10 லட்சம் செலவில் தூர்வரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏராளமான பாசன வாய்க்கால்கள், அதன் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலே கிடக்கிறது. சில இடங்களில் விவசாயிகளே முன்வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில்,
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு காலத்தோடு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மேட்டூர் அணை திறந்து 35 நாட்கள் ஆகியும் இதுவரை பாசனத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் கடந்த 25 நாட்களாக கீழணையில் இருந்து கொள்ளிடம் வழியாக வீணாக 2 லட்சம் கனஅடி வீதம், அதாவது சுமார் 50 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் கடலுக்கு தான் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி இருந்த நிலையிலும் கூட, பாசனத்திக்காக வீராணம் ஏரியில் இருந்து இதுவரைக்கும் தண்ணீரை திறக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
வீராணம் ஏரியை நம்பி திருநாரையூர், நடுத்திட்டு, பிள்ளையார் தாங்கல், எடையார், திருமூலஸ்தானம் என்று காட்டுமன்னார் கோவில், குமராட்சி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வயல்களை சம்பா சாகுபடிக்கு ஏதுவாக தயார் படுத்தி வருகின்றனர்.
ஆழ்துளை கிணறு இல்லாத விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு பயன்தரும் வகையில், கடந்த 20-ந்தேதியே ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வரக்கூடிய காலங்களில் ஏப்ரல், மே மாதத்திலேயே பாசன வாய்க்கால் களை தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும்.
காலதாமதமாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால், அதன் பின்னர் சம்பா சாகுபடியை மேற்கொண்டால், அடுத்து வர இருக்கிற வடகிழக்கு பருவமழையில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து விடும். இதற்கு அஞ்சியே பல பகுதிகளில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். எனவே உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
காவிரியின் கடை மடை பகுதியில் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதனால் கடைமடை பகுதியான சிதம்பரத்தில் ஒரு பகுதியாக இருக்கும் கொள்ளிடம் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன, அதே வேளையில் கடைமடையில் உள்ள வீராணம் ஏரியை சார்ந்துள்ள விவசாயிகள் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட ஏங்குகிறார்கள் என்றார்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. இந்த காலக்கட்டத்திலேயே எங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கொடுத்தால், தற்போது நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியின் நீர்மட்டமும் குறையாமல் பார்த்து கொள்ள முடியும். ஆனால் அதிகாரிகள் இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் இருக்கின்றனர்.
எனவே வீணாக கடலுக்கு தண்ணீர் செல்லும் நிலையில் பாசனத்துக்கு வழங்க மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்களின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story