மாமல்லபுரம் அருகே சிற்பியை கத்தியால் குத்திய நண்பர் கைது
மாமல்லபுரம் அருகே சிற்பியை கத்தியால் குத்திய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் உதயகுமார்(வயது 32) மற்றும் சஞ்சய்குமார்(30). நண்பர்களான இவர்கள் இருவரும், சிற்பக்கலை தொழில் செய்து வருகின்றனர்.
உதயகுமாரின் மனைவி, கருத்துவேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவும் அவர் முயல்வதாக கூறப்படுகிறது.
தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து செல்வதற்கு சஞ்சய்குமார்தான் காரணம் எனக்கருதிய உதயகுமார், நண்பர் சஞ்சய்குமார் மீது கோபத்தில் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நேற்று முன்தினம் பூஞ்சேரி பகுதியில் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்த சஞ்சய்குமாரின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சஞ்சய்குமார் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார். பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.