திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, பணம் திருட்டு
திருப்போரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் கீரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 52). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் சுண்ணாம்புகொளத்தூரில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நடராஜன், அவருடைய மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக சென்று விட்டனர். இருவரும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பிரோவில் தனது மகள் வளைக்காப்புக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் 12 பவுன் தங்க நகைகள் இருந்த பையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டது தெரிந்தது. அதில்தான் ஆதார்அட்டை, ரேஷன்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வைத்து இருந்ததாக நடராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி, திருப்புலியை அங்கேயே போட்டுச்சென்று விட்டனர். அதை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.