மதுரவாயல் அருகே திருநங்கையை பிளேடால் அறுத்த 2 பேர் கைது
மதுரவாயல் அருகே திருநங்கையை பிளேடால் அறுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னையை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்தவர் கயல் (வயது 22). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் இருவரும், கயலிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கயலுக்கும், அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கயல் மற்றும் அவருடன் இருந்த திருநங்கைகள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்த பிளேடை எடுத்து கயலில் கழுத்தில் அறுத்தனர். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள், கயலை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிளேடால் அறுத்த 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வானகரத்தை சேர்ந்த பெருமாள் (26), பழனி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.