செம்மஞ்சேரியில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
செம்மஞ்சேரியில், மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.
சோழிங்கநல்லூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் சேகர் (வயது 58). இவருக்கு பாளையம், எவிலியா என்ற 2 மனைவிகளும், 2 மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர். சேகர் சுனாமி குடியிருப்பு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது அந்த நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே இருந்த பெரிய மின்கம்பத்தில் இருந்த மின்வயர், சுற்றுச்சுவர் மீது இருந்த மின்வேலியில் பட்டது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.
தினமும் மாலை மின்வேலியை யாராவது துண்டித்துள்ளார்களா? என்பதை சேகர் சோதனை செய்வது வழக்கம். மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து இருந்ததை அறியாத சேகர் நேற்று வழக்கம்போல் மின்வேலியை கைவைத்து சோதனை செய்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.