தஞ்சை மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கபடி போட்டி


தஞ்சை மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கபடி போட்டி
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 24 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் பரிசு வழங்கினார்.

தஞ்சாவூர்,

தமிழ் தலைவாஸ் கபடி அணி சார்பில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெறுகிறது. ஆரம்ப நிலையில் உள்ள கபடி வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும். அதன்படி தஞ்சை மாவட்ட அளவிலான கபடி போட்டி கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டன.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் திருக் காட்டுப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. இதே போல் பெண்கள் பிரிவில் கம்பர்நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி அணியும், தஞ்சை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் தஞ்சை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது.

இதன் மூலம் அய்யம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அணி, தஞ்சை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்தலைவாஸ் கபடி அணியின் ஆரம்பநிலை வீரர்கள் ஊக்குவிக்கும் பிரிவு மேலாளர் அமர்தீப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண் டையார், மாவட்ட செயலாளர் காசி.பாஸ்கரன், பொருளாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினார். இதில் தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக அமைப்பு செயலாளர் பக்கிரி சாமி, இணை செயலாளர் அறிவழகன், ஒருங்கிணைப் பாளர்கள் வைரக்கண்ணு, சேகர், செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story