காசநோய் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் சென்னையில் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது


காசநோய் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் சென்னையில் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 24 Aug 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காசநோய் பணியாளர்கள் சென்னையில் வருகிற 3-ந் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல்,

தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் நாகராஜ் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் குணசேகரன், செய்தி தொடர்பு செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காசநோய் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு இறப்பு நிதி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு, அவசர கால விடுப்பு அளிக்க வேண்டும். பணிமாறுதல் பெற்ற பணியாளர்கள் பெற்று வந்த ஊக்கத்தொகை மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு திட்டம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். பண்டிகை கால வெகுமதி வழங்க வேண்டும்.

பயணப்படி மற்றும் பஞ்சப்படியை தற்போதைய விலைவாசிக்கு ஏற்றபடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தமாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி முதல் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்குனரகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story