சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் பலி
குன்னத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
குன்னத்தூர்,
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் (வயது 33), முனீஸ்வரன் (35), பிரவீன் (24) மற்றும் சுப்பு (50). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், விபத்தில் சிக்கி காயம் அடைந்த நண்பர் ஒருவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு வரவும் முடிவு செய் தனர்.
இதற்காக இவர்கள் 4 பேரும் பிரவீனுக்கு சொந்தமான காரில் நேற்று முன்தினம் கோபிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், விபத்தில் காயம் அடைந்த நண்பரை பார்த்து விட்டு அதே காரில் திருப்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பிரவீன் ஓட்டி வந்தார். மற்ற 3 பேரும் காரில் அமர்ந்து இருந்தனர்.
இந்த கார் குன்னத்தூர்-கோபி சாலையில் நெட்டிச்சிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்துகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. அதன் பின்னரும் அந்த கார் நிற்காமல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த கோபியை சேர்ந்த இளவரசி (18) மற்றும் பொங்கியண்ணன் (22) ஆகியோர் மீதும் மோதி விட்டு, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிரவீன், காரில் பயணம் செய்த ஜெகநாதன், முனீஸ்வரன், சுப்பு, சரக்கு ஆட்டோ டிரைவர் சின்னச்சாமி, பஸ்சுக்காக காத்திருந்த இளவரசி, பொங்கியண்ணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி சேதம் அடைந்தது. மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், குன்னத்தூர் போலீசாரும் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் ஜெகநாதன் மற்றும் முனீஸ்வரன் ஆகிய 2 பேரும் இறந்தனர். மற்றவர்களுக்கு கோபி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பிரவீனும், சுப்புவும் இறந்தனர். சரக்கு ஆட்டோ டிரைவர் சின்னச்சாமிக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கியண்ணன் மற்றும் இளவரசி ஆகிய 2 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் பலியானதால், சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story