ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
முன்னாள் டி.ஜி.பி. உறவினர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜத்தின் உறவினர் ஆவார். துரைசாமி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி ரியல் எஸ்டேட் வேலை காரணமாக சங்ககிரி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி கனகவள்ளி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரிநகர் புதிய பாலம் அருகே, காவிரி ஆற்றின் கரையோரம் ஒரு சாக்குமூட்டை ஒதுங்கியது. அந்த சாக்குமூட்டைக்குள் ஒருவர் தலை, கால், உடல் என துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் விசாரித்த போது அது மாயமான துரைசாமி தான் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் 2014-ம் ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், துரைசாமிக்கும் சங்ககிரி அருகே உள்ள ஐவேலி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், அ.தி.மு.க.வை சேர்ந்தவருமான ராமச்சந்திரன் (41) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ராமச்சந்திரன் மற்றும் அவரது டிரைவர் சங்ககிரி அக்கம்மாபேட்டையை சேர்ந்த சண்முகம் (34), குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரியை சேர்ந்த மணி (41), சாணார்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (26), சடையம்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (34) ஆகியோர் சேர்ந்து துரைசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரன், சண்முகம், மணி, சுப்பிரமணி, மஞ்சுநாதன் ஆகிய 5 பேரையும் சங்ககிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த படுகொலை தொடர்பான வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தநிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததையொட்டி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ராமச்சந்திரன், சண்முகம், மணி, சுப்பிரமணி, மஞ்சுநாதன் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், 5 பேருக்கும் மொத்தம் ரூ.21 ஆயிரத்து 500 அபராதம் விதித்தும் நீதிபதி ரவீந்திரன் உத்தரவிட்டார்.
சேலம் கோர்ட்டில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்பட 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story