கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் தன்னார்வலர்கள்


கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் தன்னார்வலர்கள்
x
தினத்தந்தி 24 Aug 2018 5:34 AM IST (Updated: 24 Aug 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் தன்னார்வலர்களிடம் பொதுமக்கள் தாராளமாக பொருட்கள் வழங்குகிறார்கள்.

ஈரோடு,

கேரள மாநிலத்தில் பெய்த பேய் மழையால் அந்த மாநிலம் வரலாறு காணாத அழிவினை சந்தித்து உள்ளது. இந்த நிலையில் பேரிடரில் சிக்கி துன்பப்பட்டு இருக்கும் பொதுமக்களுக்கு உதவி செய்ய நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தன்னார்வலர்கள், சமூக அமைப்பினர் கேரள வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வருகிறார்கள்.

ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் இருந்து ஜே.சி.ஐ. அமைப்பினர் சேகரித்த ஏராளமான நிவாரண பொருட் களை அமைச்சர் கே.சி.கருப்பணன் கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். இதுபோல் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அனுப்பி வைத்தார். மேலும் பல்வேறு சங்கத்தினர் அமைப்பினர் நிவாரண பொருட்களை வியாபாரிகள் மற்றும் பிற பொது மக்களிடம் இருந்து பெற்று அனுப்பி வருகிறார் கள். கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள், கிளாத் மெர்ச்சண்ட்ஸ் சங்கத்தினர் என்று பலரும் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நிவாரண நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து பொருட்கள் பெற்று அனுப்பி வருகிறார்கள். அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டு உள்ள உண்டியலில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இருந்து பணம் பெற்று வந்து செலுத்துகிறார்கள். இதுபோல் சில மாணவர்கள் தாங்களாகவே உண்டியல் தயாரித்து அதில் உறவினர்களிடம் இருந்து நிதி வசூல் செய்து வழங்கி உள்ளனர்.

தி.மு.க. கட்சியினர் ஒவ்வொரு வீதியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்து உள்ளனர். ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு மக்களின் உதவியுடன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வலர்கள் கேரள நிவாரண பொருட்கள் சேகரித்து வருகிறார்கள். அவர்களுக்கு பொதுமக்களும் தாராளமாக வழங்கி உதவுகிறார்கள்.

Next Story