மாவட்டம் முழுவதும் வறட்சி: கண்மாய்களை முறையாக மராமத்து செய்ய வலியுறுத்தல்


மாவட்டம் முழுவதும் வறட்சி: கண்மாய்களை முறையாக மராமத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:15 AM IST (Updated: 25 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

வட கிழக்கு பருவ மழைக்காலத்துக்கு முன்பாக நீர் நிலைகளை முறையாக மராமத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மானாவாரி சாகுபடியை நம்பி இருக்கும் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டதால் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டார்கள். இந்த நிலையில் பயிர் காப்பீட்டு தொகை ஓரளவு கிடைத்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில நாட்கள் மழை பெய்ததால் நம்பிக்கையுடன் பல பகுதிகளில் நெல், மக்காச்சோளம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடிகளை மேற்கொண்டனர்.

ஆனால் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்த மழை அதன் பின்னர் முற்றிலுமாக ஏமாற்றி விட்டது. மாவட்டம் முற்றிலுமாக மழை மறைவு பிரதேசமாக மாறிவிட்டது. தென் மேற்கு பருவ மழைக்காலம் முடிவுறும் நிலை ஏற்பட்டுவிட்டாலும் இம்மாவட்டத்தில் மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு விட்டன.

மாவட்டத்தில் பிளவக்கல், கோவிலாறு பெரியாறு அணை, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி, இருக்கன்குடி ஆகிய அணைக்கட்டுகள் உள்ள போதிலும் பிளவக்கல் அணை மட்டுமே முற்றிலுமாக பாசனத்துக்கு பயன்படும் நிலையில் உள்ளது. ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகள் அந்த பகுதியில் குடிநீர் தேவைக்கும், பாசன வசதிக்காகவும் கட்டப்பட்டவை ஆகும். பிளவக்கல் அணையை பொறுத்தமட்டில் அணை நிரம்பி திறந்து விடப்பட்டால் அதன் கீழ் உள்ள கண்மாய்கள் நிரம்பி பாசனத்துக்கு பயன்படும் நிலை ஏற்படும். மற்ற அணைகளில் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் உபரி நீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடி அணைக்கட்டுகளில் தேக்கி வைக்க வேண்டிய நிலையில் தான் உள்ளன.

இருக்கன்குடி அணை சாத்தூர் பகுதி குடிநீர் பயன்பாட்டிற்கும், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் பயிர் சாகுபடிக்கும் பயன்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆனைக்குட்டம் மற்றும் வெம்பக்கோட்டை அணைகள் முறையே சிவகாசி, விருதுநகர் பகுதியில் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய பயன்படும் நிலையில் உள்ளன. இம்மாவட்டத்தில் 950-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளன.

போதிய மழை இல்லாததால் அணைக்கட்டுகளும், கண்மாய்களும் வறண்டு விட்டன. மேலும் ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி, கோல்வார்பட்டி அணைகளை மராமத்து செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் மராமத்து பணிகள் முறையாக நடக்காத நிலையில் அணைகளில் இருந்து நீர் கசிந்தும், அணைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பாலும் ஓரளவு தேங்கிய நீரும் வெளியேறி காய்ந்தும் வறண்டுவிட்டன. ஆனைக்குட்டம் அணையை கட்டிய நாளில் இருந்தே நீர்க்கசிவு இருந்து வரும் நிலையில் நீர்க்கசிவை தடுக்க பல முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற போதிலும் நீர்க்கசிவு தொடர்ந்ததால் அந்த அணையில் நீண்டநாட்களுக்கு நீரை தேக்கி வைக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன் நிதி உதவி கிடைத்து வந்ததால் கண்மாய்களில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை வைத்துத்தான் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் பெயரளவிற்கு மராமத்து பணிகள் நடப்பதால் கண்மாய்களில் தேங்கும் நீரும் வெளியேறி விடுவதாக கிராம மக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. பல கண்மாய்களில் மண் மேவி உள்ளதாலும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பாலும் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மொத்தத்தில் மழை பொய்த்ததாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் பாசனத்துக்கு பயன்படக்கூடிய வகையில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பயிர் சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகள் தொடர் மழை இல்லாததாலும் நீர்நிலையில் இருந்து பாசன வசதி கிடைக்காததாலும் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் முற்றிலுமாக கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ள நிலையில் மழை பொய்த்ததால் அவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் அவர்கள் பஞ்சம் பிழைக்க கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் அணைகள் மற்றும் கண்மாய்களில் நீரைத் தேக்கி வைக்க கூடிய அளவில் முறையான மராமத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கண்மாய் மராமத்துப் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் குடி மராமத்து முறையிலாவது கண்மாய்களை மராமத்து செய்யவும், வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி வைத்தால் தான் அருகில் உள்ள கிணறுகளிலும் நீர் ஊற்று பெருகி கிணற்று பாசனத்தின் மூலம் பயிர்களை காப்பாற்ற வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

Related Tags :
Next Story