திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்: பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்: பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு சாமி தரிசனம் செல்லும் பெரும்பாலான பக்தர்கள் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி மகா தீபம் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை 6 மணி அளவில் நடந்தது. முன்னதாக பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம், மாலை அணிந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பின்னர் கோவில் ராஜகோபுரத்தின் அருகில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவில் முன்பு உள்ள தேர்களுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story