வியாபாரி வீட்டில் 34 பவுன் நகை திருட்டு
கம்பத்தில் வியாபாரி வீட்டில் 34 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கம்பம்,
கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் சுதாகர் (வயது 50). இவர், கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ந்தேதி இவர், தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குலதெய்வத்தை தரிசனம் செய்ய திருச்செந்தூர் சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சுற்றுச்சுவரை ஏறி குதித்து சுதாகர் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவில் தொங்கி கொண்டிருந்த பூட்டை உடைத்தனர். மேலும், கதவு தாழ்ப்பாளின் பூட்டை இரும்பு கம்பியால் நெம்பி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து, அதில் இருந்த 34 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சுதாகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி புதிய பஸ்நிலையம், மாரியம்மன்கோவில், கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள சினிமா தியேட்டர் முன்பு நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் தேனி கைரேகை பிரிவு ஆய்வாளர் ராமர் தலைமையிலான குழுவினர் வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் பதிவாகி இருந்த திருடர்களை கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மோப்பநாய் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story