நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:02 AM IST (Updated: 25 Aug 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அரசு டாக்டர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர்கள் அருள், ரங்கநாதன், ரங்கசாமி, லீலாதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசு டாக்டர்களுக்கும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் டாக்டர்கள் அமுதா, ரகுகுமரன், மகேஷ்குமார், கார்த்திகேயன், ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸிலி ராஜ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் டாக்டர் ரங்கநாதன் கூறியதாவது:- கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் 9 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 15 அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். எனவே அரசு காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான கால முறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story