நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:05 AM IST (Updated: 25 Aug 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரூர்பட்டி, ஆவல்நாய்க்கன்பட்டி, வீசாணம், வகுரம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மரூர்பட்டி ஊராட்சி, கரட்டுப்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து ஆவல்நாய்க்கன்பட்டி ஊராட்சி பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும், ஆவல்நாய்க்கன்பட்டி ஊராட்சி, செங்கலிகவுண்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.11 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியையும், வீசாணம் ஊராட்சியில் ரூ.77 ஆயிரம் மதிப்பீட்டில் கடக்கால்புதூர் வாய்க்காலில் தடுப்பணை அமைக்கப்பட்டு வரும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சிகூடம் அமைக்கப்பட்டு உள்ள பணி என நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறியதாவது.

நாமக்கல் மாவட்டத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 268 வீடுகள் ரூ.38 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, 1,172 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 1,096 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.2017-18-ம் நிதியாண்டில் 1,717 வீடுகள் ரூ.29 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, 174 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 1,543 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்் செல்வராஜ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story