தறிகெட்டு ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது : 3 பேர் உயிர் தப்பினர்


தறிகெட்டு ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது : 3 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 24 Aug 2018 9:45 PM GMT (Updated: 25 Aug 2018 12:10 AM GMT)

சிறுபாக்கத்தில் தறிகெட்டு ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிறுபாக்கம், 

ஈரோடு மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 42). இவர் அதே பகுதியில் ஆயில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் தனது தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் கலியமூர்த்தி மகன் இளங்கோ(26), விஜயகுமார்(29) ஆகியோருடன் ஒரு காரில் கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு வந்தார். பின்னர் சரவணன் மாலை 4 மணிக்கு ஈரோட்டுக்கு திரும்பினார். காரை விஜயகுமார் ஓட்டினார்.

சிறுபாக்கம் பஸ் நிலையம் அருகே வந்த போது நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் விஜயகுமார் காரை சாலையோரமாக திருப்ப முயன்றார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள விளை நிலத்தில் இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதில் காருக்குள் சிக்கி லேசான காயமடைந்த சரவணன் உள்ளிட்ட 3 பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்ட அருகில் உள்ள வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த காரில் சிக்கிய சரவணன், இளங்கோ, விஜயகுமார் ஆகிய 3 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

Next Story