மினி லாரி மோதி பஸ் டிரைவர் பலி: உறவினர்கள், பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியல்


மினி லாரி மோதி பஸ் டிரைவர் பலி: உறவினர்கள், பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:52 AM IST (Updated: 25 Aug 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தனியார் பஸ் டிரைவர் பலியான சம்பவத்தில் மினி லாரி டிரைவரை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேலு (வயது 44), தனியார் பஸ் டிரைவர். இவருடைய உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூர் அருகே திருவந்திபுரத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சக்திவேலு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பத்துக்கண்ணுவில் இருந்து வில்லியனூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரி அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேலு அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விபத்தில் சக்திவேலு இறந்த தகவல் அறிந்து அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உளவாய்க்கால் பகுதிக்கு திரண்டு வந்தனர். சக்திவேலு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியின் டிரைவரை கைது செய்யக்கோரி நேற்று இரவு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த வில்லியனூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை வரை சக்திவேலு மீது மோதிய மினி லாரியின் டிரைவரை கைது செய்யாததை அறிந்து சக்திவேலுவின் உறவினர்கள் மற்றும் செல்லிப்பட்டு கிராம மக்கள் பத்தக்கண்ணு சந்திப்பு பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கு 5 ரோடுகள் சந்திக்கும் முக்கியமான சந்திப்பில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்த மறியல் போராட்டம் தொடர்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 5 சாலைகளிலும் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசங்கர வல்லாட் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சக்திவேலு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினிலாரியை தேடி வருவதாகவும், விரைவில் அதனை கண்டுபிடித்து டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

மேலும் இந்த மறியல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை போலீசார் எடுத்துக்கூறினார்கள். சுமார் 30 நிமிட நேரம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த மறியல் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சக்திவேலு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினிலாரியை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம், மரக்காணம், கடலூர் சாலை மார்க்கத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், விபத்து நடந்த நேரத்தை வைத்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story