தாயின் இறுதி சடங்குக்கு வரமறுத்த மகள்: உடலை தகனம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்கள்


தாயின் இறுதி சடங்குக்கு வரமறுத்த மகள்: உடலை தகனம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்கள்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:56 AM IST (Updated: 25 Aug 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

தாயின் இறுதி சடங்குக்கு மகள் வரமறுத்ததால் அவரது உடலை அக்கம் பக்கத்தினரே தகனம் செய்த உருக்கமான சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.

வசாய்,

பால்கர் மாவட்டம் மனோர், டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் திராஜ் பட்டேல் (வயது70). இவரது மனைவி நிருபென் (65). நேற்று முன்தினம் நிருபென் திடீரென இயற்கை மரணம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆமதாபாத்தில் வசிக்கும் நிருபெனின் ஒரே மகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது மகள் கொடுத்த பதில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவர் தனக்கு அதிக வேலைகள் இருப்பதால் தாயின் இறுதி சடங்கிற்கு வரமுடியாது என கூறினார்.

நிருபெனின் கணவர் திராஜ் பட்டேல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். மகள், இறுதி சடங்கிற்கு வர முடியாது என கூறியதால் மனைவியின் உடலை எப்படி தகனம் செய்வது என அவர் தவித்தார். அதை பார்த்து மனம் உடைந்த அக்கம் பக்கத்தினர் நிருபெனின் உடலை அவர்களே தகனம் செய்துவிட முடிவு செய்தனர்.

அவர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் நிருபெனின் உடலை தூக்கி சென்று இந்து முறைப்படி தகனம் செய்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர், தாயின் அஸ்தியை வந்து வாங்கி செல்லுமாறு உயிரிழந்த பெண்ணின் மகளை தொடர்பு கொண்டு கூறினர். அப்போது அவர், தாயின் அஸ்தியை கூரியரில் அனுப்பும்படி கூறியது பக்கத்து வீட்டுக்காரர்களை மேலும் வேதனைப்படுத்தியது.

இதுகுறித்து நிருபென்னிற்கு இறுதி சடங்கு செய்த பக்கத்துவீட்டுக்காரர் கான் கூறும்போது, ‘‘அவரது மகளை நேற்று தொடர்பு கொண்டு அஸ்தியை வாங்கி செல்லுமாறு கூறினோம். அப்போது அவர் கூரியரில் அஸ்தியை அனுப்புமாறு கூறியதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆமதாபாத்தில் இருந்து பால்கர் வர 7 மணி நேரம் கூட ஆகாது’’ என வேதனையுடன் கூறினார்.

பார்சி சமூக பெண்ணின் இறுதி சடங்கிற்கு மகள் கூட வரமறுத்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரது உடலை தகனம் செய்து எல்லா சடங்குகளையும் செய்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story