புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு


புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Aug 2018 5:59 AM IST (Updated: 25 Aug 2018 6:17 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

புனே,

புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு ஏற்கனவே புனேயில் 2 பேரும், பிம்ப்ரியில் இருவரும் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், புனேயில் மேலும் ஒரு பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்து உள்ளார்.

ஹடப்சர் பகுதியை சேர்ந்த 55 வயதான அந்த பெண்ணுக்கு கடந்த 6-ந் தேதி காய்ச்சல் மற்றும் சுவாசகோளாறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார்.

ஆனால் காய்ச்சல் குணமாகாமல் அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் கடந்த 11-ந் தேதி சிகிச்சைக்காக அங்குள்ள கே.இ.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள இன்னொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் மூலம் இந்த ஆண்டு புனேயில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story