லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை: 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை: 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 25 Aug 2018 6:02 AM IST (Updated: 25 Aug 2018 6:02 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் லாரி டிரைவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த வாலிபர் களுக்கு மாவட்ட கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியில் வசிப்பவர் சேக்தாவூது (வயது 35). அவருடைய நண்பர் சொத்தலம்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (32). இவர்கள் இருவரும் கடந்த 29.6.2017 அன்று இரவு காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது திருநள்ளாறு சாலையில் கையில் ‘பேக்’ ஒன்றுடன் தனியாக நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷ் (31) என்பவரிடம் திருநள்ளாறு சென்றால் மது குடிக்கலாம் வா என கூறி அவரை திருநள்ளாறு புறவட்டச் சாலை (ரிங் ரோடு) பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ராஜேசை தலையில் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அவருடைய சட்டைப் பை மற்றும் பேக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த கொலை குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு ரோந்து சென்ற போலீசார் சம்பவத்தன்று இரவு நேரத்தில் திருநள்ளாறு சாலையில் நின்று கொண்டிருந்த சேக்தாவூது, மற்றும் மாரிமுத்துவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு லாரி டிரைவர் ராஜேசை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மீது காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று மாலை சேக்தாவூது மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story