முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தீவிரம்: கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல விசைப்படகுகள் வருகை


முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தீவிரம்: கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல விசைப்படகுகள் வருகை
x
தினத்தந்தி 26 Aug 2018 4:30 AM IST (Updated: 26 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பொருட்களை தண்ணீரில் எடுத்து செல்ல விசைப்படகுகள் வர உள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பகுதியில் சேதமடைந்த மதகுகள் சீரமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. 2 தலைமை பொறியாளர்கள், ஒரு கண்காணிப்பு பொறியாளர், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் அவர்களுக்கு கீழே அதிகமான பொறியாளர்களை கொண்டு 24 மணி நேரம் என்கிற அடிப்படையில் இடைவெளி இல்லாமல் உரிய கண்காணிப்போடு பணிகள் நடந்து வருகிறது. இதில் நீரில் இயங்க கூடிய ராட்சத எந்திரங்கள் சென்னையில் இருந்து வந்து விட்டன. அதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

பகல், இரவு நேரங்களில் தலா 300 பணியாளர்கள் இந்த சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அணையில் சேதமடைந்த பகுதி 108 மீட்டர் ஆகும். இருந்தாலும் கூடுதலாக தென் பகுதியில் இருந்து வட பகுதி வரை மொத்தம் 220 மீட்டர் நீளத்தில் தற்காலிக பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மணல் மூட்டைகள் ஒரு பகுதியாகவும், அதற்கும் ஷட்டருக்கும் இடையே கான்கிரீட் சுவர் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நலனுக்காக பாதுகாப்பிற்காக மாநில பேரிடர் மீட்பு குழுவில் அனுபவம் வாய்ந்த குழு 24 மணி நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்களின் உடல் நலன் கருதி முதல் உதவி சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவ குழுவும் உள்ளது. பணி முடியும் வரையில் இந்த குழு இயங்கும். வருவாய்த்துறை ஊழியர்களும் தங்கியிருந்து பொதுப்பணித்துறையினருக்கும், பணியாளர்களுக்கும் உதவி புரிந்து வருகின்றனர்.

கட்டுமான பொருட்களை தண்ணீரில் கொண்டு செல்வதற்கு வசதியாக மீன்வளத்துறை மூலம் விசைப்படகுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. ஒரு வார காலத்தில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இந்த சீரமைப்பு பணிக்காக எந்த இடத்திலும் பாதிப்பு இல்லாத வகையில் மணல் கொண்டு வரப்படுகிறது. மணல் அதிகம் தேவை என்பதால் எந்த இடத்தில் மணல் அள்ளினால் பாதிப்பு இல்லையோ அங்கிருந்து கொண்டு வரப் படுகிறது. அணையையொட்டி காவிரி கரையில் மணல் அள்ளப்படவில்லை. இதனால் மணல் அள்ளுவது பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். முக்கொம்பு சுற்றுலா தலத்தில் முன்பகுதியில் பூங்காவை மட்டும் பார்வையிட செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் ரூ.410 கோடியில் புதிய அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. தலைமை பொறியாளர்கள், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் தனியாக திட்ட அறிக்கை, வரைபடம் தயாரித்துள்ளனர். அந்த பணியும் தனியாக நடந்து வருகிறது. அரசின் உரிய ஒப்புதல் பெற்று உரிய காலத்தில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய அணை கட்டி முடிக்கப்படும். தற்போது உள்ள அணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய அணை கட்டப்படும் போது கரைக்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆற்றின் கரைக்கு உள்ளே கட்டிடங்கள் இருந்தால் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தண்ணீரில் இயங்க கூடிய ராட்சத எந்திரம் சென்னையில் இருந்து நேற்று திருச்சி வந்தது. முக்கொம்பு மேலணையில் இறங்கி செல்வதற்கு வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பராய்த்துறையில் இருந்து காவிரி ஆற்றின் வழியாக எந்திரம் கொண்டு செல்லப்பட உள்ளது. தண்ணீரில் அந்த எந்திரத்தை மிதக்கவிட்டு அதன் மேல் பொக்லைன் எந்திரம் நிறுவி பணிகள் மேற்கொள்ளப்படும்.

Next Story