2 ஆண்டு திட்டங்களை ஒரே ஆண்டில் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
2 ஆண்டு திட்டங்களை ஒரே ஆண்டில் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய விழா, ஆண்டுவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் 11 மற்றும் 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் இறுதிக்குள் மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கப்படும். அதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார். 2 ஆண்டு காலத்தில் செய்யக்கூடிய திட்டங்களை ஒரே ஆண்டு செயல்படுத்தக்கூடிய ஆட்சியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
6 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் அடுத்த வாரம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வரப்படும். 9, 10, 11, 12–ம் வகுப்பு வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு இன்டெர்நெட் இணைப்பு கொடுக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
1, 6, 9, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஜி.ஆர். அல்லது கவிக் ரெஸ்பான்ஸ் என்ற கோடு முறை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் ஒருவரே பாராட்டியுள்ளார். பிளஸ்–2 முடித்தாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசு செயல்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசும்போது ‘பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு காலணி முதல் சீருடை வரை இலவசமாக வழங்கி தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்த துறையாக பள்ளிக்கல்வித்துறை திகழ்கிறது’ என்றார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, பவானி கல்வி மாவட்ட அதிகாரி எஸ்.ரேணுகாதேவி, அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மாணவ–மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் எஸ்.பாண்டியன் வரவேற்று பேசினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஆர்.மாதேஸ்வரன் நன்றி கூறினார்.