கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு


கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வசதியாக, கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கல்லணைக்கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காதது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கல்லணைக்கால்வாயின் தலைப்பு பகுதியில் மணல் திட்டுகள் இருப்பதும், இவை வெள்ள ஓட்டத்துக்கு இடையூறாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லணைக்கால்வாய் தலைப்பில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் ஆட்கள் இறங்கி நடந்து செல்லும் அளவுக்கு இந்த மணல் திட்டுகள் இருந்தன. கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வசதியாக மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மணல் திட்டுகளை அகற்றும் பணி நேற்று தீவிரமாக நடந்தன. இதில் கல்லணைக்கால்வாய் தலைப்பில் தண்ணீர் திறப்பை நிறுத்தாமல் மிதவையின் உதவியுடன் பொக்லின் எந்திரத்தை தண்ணீரில் இறக்கி மணல் திட்டுகள் அகற்றப்பட்டன.

இதேபோல் கால்வாயின் கரையோரத்திலும் மணலை அகற்றும் பணி எந்திரம் மூலம் நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர்கள் சுந்தர், கார்த்திகேயன், இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-

கல்லணைக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரை நிறுத்தாமல் பணிகளை செய்ய ஏதுவாக மிதவையுடன் பொக்லின் எந்திரங்களை கால்வாயில் இறக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லணைக்கால்வாயில் நீரோட்டத்துக்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகள் முழுமையாக அகற்றப்படும். அதிக நீர்வரத்தினால் தேங்கிய மண்ணை முழுமையாக அப்புறப்படுத்தி தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கல்லணைக்கால்வாயின் தலைப்பில் உள்ள மணல் அகற்றப்பட்டால் தண்ணீர் முழுவீச்சில் கடை மடைக்கு சென்றடையும் என எதிர்பார்க்கிறோம். அதிக நீர்வரத்தினால் தேங்கிய மணல் அகற்றப்பட்டு வருகிறது. இதில் அள்ளப்படும் மணல் அரசு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்”என்றனர். 

Next Story