கோத்தகிரி அருகே வீட்டு கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய கரடி குட்டி


கோத்தகிரி அருகே வீட்டு கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய கரடி குட்டி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே வீட்டு கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையில் சிக்கி கரடி குட்டி உயிருக்கு போராடியது. அதனருகில் மற்றொரு குட்டியை முதுகில் சுமந்தபடி தாய் கரடி பாசப்போராட்டம் நடத்தியது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே டானிங்டன் ரைபில் ரேஞ்சு குடியிருப்பு பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக அந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ரைபில் ரேஞ்ச் பகுதியில் இருந்து பெந்தட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் ஜெகநாதன் என்பவரது வீடு உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த வீட்டு முன்பக்க கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையில் தலை சிக்கியவாறு கரடி குட்டி ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. சத்தம் கேட்டு ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது கரடி குட்டி உயிருக்கு போராடி கொண்டிருப்பதும், அதனருகில் தாய் கரடி மற்றொரு குட்டியை முதுகில் சுமந்தபடி பாசப்போராட்டம் நடத்தி கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து உடனே கோத்தகிரி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் சிவபார்வதி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீப்பந்தம் காட்டி தாய் கரடியை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினரின் உதவியுடன் கரடி குட்டியை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு கரடி குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த கரடி குட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் ஓடி சென்று, மறைந்தது. குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் புகுவதை தடுக்கவும், அவற்றை கூண்டு வைத்து பிடிக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்(எச்.பி.எப்.) தொழிற்சாலை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கரடி சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த அங்கிருந்த காவலர்கள், பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் அந்த கரடி புதருக்குள் சென்று மறைந்தது. மத்திய அரசுக்கு சொந்தமான மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை பகுதியில் உலா வந்த அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வீட்டு கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையில் கரடி குட்டி சிக்கி இருப்பதையும், அதனருகில் மற்றொரு குட்டியை முதுகில் சுமந்தபடி பாசப்போராட்டம் நடத்திய தாய் கரடியையும் பார்க்க அங்கு பொதுமக்கள் திரண்டனர். அதில் சிலர் ஆபத்தை உணராமல் கரடிகளுடன் தங்களது செல்போனில் ‘செல்பி‘ எடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே அங்கு வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.


Next Story