மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு பா.ஜனதா கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு திருப்பூர் டவுன்ஹாலில் பா.ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதன் பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது அஸ்தி தமிழ்நாட்டில் உள்ள 7 இடங்களில் கரைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள டவுன்ஹாலுக்கு வாஜ்பாயின் அஸ்தி கலசம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வாஜ்பாயின் வாழ்க்கை நாட்டின் வளர்ச்சி பாதையாக உள்ளது. 2 ஆண்டுகளில் 5½ கோடி மக்களுக்கு கியாஸ் இணைப்பு தந்தவர் வாஜ்பாய். தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர்.
வாஜ்பாயின் திட்டங்களில் புதுமைகளை புகுத்தி பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் மோடி விரைவில் இணைப்பார். இது வாஜ்பாய்க்கு பா.ஜனதா கட்சியினர் செலுத்தும் புகழஞ்சலி ஆகும்’’.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர் வாஜ்பாயின் அஸ்திக்கு அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இது போல் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில இளைஞரணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ், மாநில செயலாளர் நந்தகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சின்னச்சாமி, சேவாபாரதி மாநில துணைத்தலைவர் எக்ஸ்சலன்ட் ராமசாமி, மாவட்ட தலைவரும், ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளருமான விஜயகுமார் மற்றும் பா.ஜனதாவினர், பொதுமக்கள் பலரும் வாஜ்பாய் அஸ்திக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த அஸ்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு கொண்டு செல்லபட்டு கரைக்கப்படுகிறது.
முன்னதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக இந்த அஸ்தி பல்லடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. கடைவீதியில் உள்ள காமராஜர் திடலில் வைக்கப்பட்டிருந்த இந்த அஸ்திக்கு பா.ஜனதா கட்சியினர் உள்பட பல்வேறு கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.