தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை


தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2018 5:22 AM IST (Updated: 26 Aug 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மந்திரி என்.மகேஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பள்ளிக்கல்வி துறை மந்திரி என்.மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் தங்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து கூடிய விரைவில் முதல்-மந்திரி முடிவு எடுத்து அறிவிப்பார். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கேரளா மாநிலத்தை போல குடகிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தை சீரமைக்க ரூ.3 ஆயிரம் கோடி தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். அதன்மூலம் குடகில் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டப்படும்.

குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேசுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மத்திய மந்திரி மீது அவர் அதிருப்தி அடைந்துள்ளார். சித்தராமையா முதல்-மந்திரி ஆவேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அப்படி இருக்கும்போது சித்தராமையாவால் முதல்-மந்திரி ஆக முடியுமா?, அது சாத்தியமில்லை.

மற்ற துறைகளை போல, பள்ளிக்கல்வி துறையை திறம்பட நிர்வகித்து செல்வது எளிதல்ல. கல்வி என்பது ஒரு சேவையாகும். அது தற்போது ஒரு வியாபாரமாக மாறி விட்டது.

இவ்வாறு மந்திரி என்.மகேஷ் கூறினார்.

Next Story