ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; துக்கம் தாங்காமல் பாட்டி தற்கொலை


ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; துக்கம் தாங்காமல் பாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 27 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இதில் ஒரு மாணவனின் பாட்டி துக்கம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்றில் மாயமான மற்றொரு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மார்வாடி தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் அம்மாப்பேட்டையில் தையல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் விவேக் (வயது15). அம்மாப்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கிருபாகரன் (15). அம்மாப்பேட்டை திருமலை நகரை சேர்ந்த வியாபாரி சிவானந்தத்தின் மகன் செல்வகுமார் (15). விவேக், கிருபாகரன், செல்வகுமார் ஆகிய 3 பேரும் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று விடுமுறை நாள் என்பதால் அம்மாப்பேட்டை அருகே திருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றுக்கு குளிக்க சென்றனர்.

அப்போது வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் இருந்து ஆற்றில் குதித்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி மாயமான 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விவேக், கிருபாகரன் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது. இதில் விவேக்கின் உடலை எக்கல் என்ற பகுதியிலும், கிருபாகரனின் உடலை மகிமாலை இருகரை பகுதியிலும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இவர்களுடைய உடல்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவன் கிருபாகரன் ஆற்றில் மூழ்கி இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் அவருடைய பாட்டி ராஜேஸ்வரி (80) கதறி அழுதார். இந்தநிலையில் அவர் திடீரென தனது வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் கீழே இறக்கி பார்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது.

ஆற்றில் மாயமான மாணவன் செல்வகுமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் இறந்ததும் இதில் ஒரு மாணவரின் பாட்டி துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும் அம்மாப்பேட்டை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story