பழைய பாசத்தில் இருக்கும் திருநாவுக்கரசர் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்கே செல்ல வேண்டும்


பழைய பாசத்தில் இருக்கும் திருநாவுக்கரசர் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்கே செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பழைய பாசத்தில் இருக்கும் திருநாவுக்கரசர் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்கே செல்ல வேண்டும் என்று சமயபுரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வாஜ்பாய் பற்றியும், பாரதீய ஜனதா கட்சியை பற்றியும் உயர்வாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அவர் சொல்லித்தான் எங்களுக்கே இது பற்றி தெரிகிறது. நல்ல கட்சியில் இருந்த அவர் மீண்டும் அங்கேயே சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பழைய பாசத்தில் இருக்கும் அவர் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்கே செல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

1967-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் ஏரி, குளங்களை மக்களே தூர் வாரினர். தற்போது தூர் வாருகிறேன் என்று சொல்லி அரசு கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கி, அதில் ஒரு சதவீதம் கூட தூர் வாராமல் தங்களுடைய பையை நிரப்பிக் கொண்டார்கள். தூர்வாராத காரணத்தால் காவிரி நீரும், தாமிரபரணி நீரும், கடைமடை பகுதிக்கு செல்லாமல் கடலில் சென்று வீணாகிறது. ஆட்சியாளர்கள் இருக்கும் கொஞ்ச நாளிலாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கருணாநிதி இறந்தபோது பிரதமர் மோடி வந்து பார்த்தார். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொள்வதில் தவறேதும் இல்லை. காங்கிரஸ், தி.மு.க. உறவில் எந்த விரிசலும் இல்லை. மு.க.அழகிரியை பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story