ராமேசுவரம், மதுரையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல், மதுரை வைகை ஆறு ஆகிய இடங்களில் கரைக்கப்பட்டது.
ராமேசுவரம்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று நாடு முழுவதும் ஆறு மற்றும் கடல்களில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ராமேசுவரம், சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் அவரது அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் ராமேசுவரத்துக்கு தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் அலங்கார வாகனத்தில் அஸ்தி எடுத்து வரப்பட்டது. அப்போது பார்த்திபனூர், பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 8.30 மணியளவில் பாம்பனில் இருந்து புறப்பட்டு தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையத்தை அடைந்தது.
பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து துளசிபாபா மடம் தெரு, ராமதீர்த்தம் வடக்கு, மேலத்தெரு, நடுத்தெரு, ரதவீதி வழியாக அக்னி தீர்த்த கடற்கரையை அடைந்தது. அங்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு புரோகிதர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்பு எச்.ராஜா அந்த அஸ்தியை அக்னி தீர்த்த கடலில் கரைத்து புனித நீராடினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர்கள் வக்கீல் குப்புராமு, சுப.நாகராஜன், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் அலெக்ஸ் சுதாகர், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர், தொழில் பிரிவு தலைவர் பவர் நாகேந்திரன், நகர் பொருளாளர் ராமச்சந்திரன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் அப்துல் கலாம், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் துரைகண்ணன், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதாசுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு வந்தது. பின்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி நேற்று காலை 8–மணிக்கு பி.பி.குளத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து செல்லூர், முனிச்சாலை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், வடக்குமாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பு ஆகிய இடங்களிலும் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சிம்மக்கல் தரைப்பலம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அபிஷேக நீர் எடுத்து செல்லும் கிணறு உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்பு பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் முழங்க பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.ஆர்.காந்தி வாஜ்பாய் அஸ்தியை வைகை ஆற்றில் ஓடும் நீரில் கரைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன், துணைத் தலைவர் கீரைத்துரை குமார், உட்பட பலர் கலந்துகொண்டனர்.